தமக்கென்று கேளாமல் சத்தியமாய்த் துதிப்போருக்குப் பதினாறு பேறுகளை இப்பூவுலகில் அளிக்க அவர் விண்ணப்பிப்பது குறிப் பிடத்தக்கது.
நோயற்ற வாழ்வு இருந்தால் மட்டுமே பிற பேறுகளை அனுபவிக்க இயலும். ஆகவே நோயின்மையை முதலில் குறிப்பிட்டார்.
பொருளீட்டவும், அதனைக் காக்கவும் கல்வியறிவு தேவை.
அடுத்த இன்றியமையாத தேவை உணவு. அரிசி கோதுமை, துவரை, கடலை போன்ற தானியங்கள் உணவுக்கு மூலாதாரம்.
தானியம் வாங்கப் பணம் வேண்டும். ஆகவே தனம் வேண்டினார். பொன், பொருள், பிற செல்வங்கள் இப்பேற்றினில் அடங்கும்.
முதலில் நான்கு விதமான அடிப்படைத் தேவைகளைக் கேட்ட பிறகு மற்றப் பேறுகளைக் கேட்கிறார். இயற்கை-செயற்கை அழகு, அக- புற அழகு போன்றவை நமக்குச் சிறப்பு சேர்ப்பவை.
உயிரைக் கொடுத்தும் மக்கள் புகழடைய விரும்புகிறார்கள். 'தன்னுயிர் புகழ்க்கு விற்ற சடாயு' என்று கம்பர் பாடுகிறார். 'Seeking the buble reputation even in the cannon's mouth' ( பீரங்கி வாயிலும் நீர்க்குமிழி போன்ற புகழ் பெற விரும்புவர்) என்கிறார் ஷேக்ஸ்பியர்.
நற்குடியில் பிறந்ததாலும், கல்வியாலும், சமுதாயத்தில் பெற்ற அந்தஸ்தாலும் பெருமை கொள்ளலாம். ஆனால் அவற்றால் ஆணவம் கூடாது.
பல்லாண்டு நீடித்த இளமையுடன் இருத்தல் ஒரு பேறு. உடலாலும், மனத்தாலும் இளமையுடன் இருத்தல் சிலருக்கே வாய்க்கும்.
மனதைத் தன் வழியில் செல்லவிடாமல் நற்செயல்களில் செலுத்துவதே அறிவு என்பார் வள்ளுவர். அதுவே ஒரு பேறாகும்.
நன்மக்களைப் பெறுதல் மிகச் சிறந்த பேறு
உடல் மற்றும் உள்ளத்து வலிமையை இங்கு 'வலி' என்று குறிப்பிடுகிறார் பட்டர்.
அடுத்ததாகத் துணிவு ஒரு பேறாகும்.
மன்னன் விக்கிரமாதித்தனிடம் எட்டு லட்சுமிகளும் வாசம் செய்தனர். ஒரு நாள் அவர்கள் அவனை விட்டு நீங்குவதாகக் கூறினார்கள். அவன் பெரிதும் விரும்பும் ஒரு லட்சுமி மட்டும் நிலைத்திருக்கத் தயார் எனவும் கூறினார்கள். விக்கிரமாதித்தன் தைர்ய லட்சுமியே தன்னுடன் தங்க வேண்டும் என்றான். அவனது பதிலால் மகிழ்ந்து அஷ்டலட்சுமிகளும் நிலைத்து வாழ்ந்தனர் என்பர். இதனால் துணிவின் சிறப்பு தெளிவாகிறது.
வாழ்நாள் என்பது நீண்ட ஆயுளைக் குறிக்கும் என்றும் பதினாறு என்ற ஆயுளை மார்க்கண்டேயருக்குச் சிவபெருமான் அளித்ததுபோல் நமக்கும் அபிராமி அம்மை நீண்ட ஆயுளை அருள வேண்டும்.
எடுத்த செயல்கள் யாவினும் வெற்றி எய்துவதும் ஒரு பேறு.அதனையும் அன்னை அபிராமி அருள்வாள்.
வள்ளுவர் ஊழினை, ஆகூழ், போகூழ் என இருவகைப்படுத்தினார். ஒருவனுக்கு ஆகூழால் சுறுசுறுப்பும், போகூழால் சோம்பலும் தோன்றும் என்கிறார். ஆகவே அபிராமி பட்டரும் ஆகு நல்லூழ் வேண்டும் என்கிறார்.
மேற்சொன்ன பதினைந்து பேறுகளையும் அனுபவிக்கும் வாய்ப்பை நுகர்ச்சி என்பர். வள்ளுவரும் 'வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது' என்கிறார். அத்தகைய துய்க்கும் நுகர்ச்சியை அபிராமியே நல்குவாள். அவற்றை அருளும் அபிராமியின் சிறப்புகளை பாடலின் நி¨றைவுப் பகுதியில் உறைக்கிறார். அவள் நற்குணங்கள் உடையவள், உலகைப் பரிபாலிப்பவள். பக்தர்களுக்கு அனுகூலம் செய்பவள். முத்தலைச் சூலம் தாங்கியவள். மங்களம் நிறைந்தவள். மகிமை வளர் திருக்கடவூரில் வாழ்பவள். அழகானவள். நல்ல ஆக்ஞா சக்கரம் உடையவள். அதாவது நல்லாட்சி புரிபவள். புகழ் பெற்றவள். சிவ னுக்கு மகிழ்ச்சி அளிப்பவள் சிவனின் வாம (இடப்) பாகத்தில் இருப்பதால் வாமி எனப்படுபவள்.
நாமும் நாளும் இப்பாடலைப் பாராயணம் செய்து பதினாறு பேறுகளும் பெறுவோமாக.
நன்றி; ராமகிருஷ்ன விஜயம்